ஒரே நாளில் 17 பேர்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்

தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி வரை 3 பேர் நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தலா மூவர் வீதம் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மார்ச் 24-ம் தேதி 6 பேருக்கும், 25ம் தேதி 8 பேருக்கும், 26-ம் தேதி மூன்று பேருக்கும் கொரோனா பரவியது. அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்ததும், உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி சொந்த ஊர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. அரியலூர் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா நகரில் 39 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர் முதுகலை பட்டம் பயின்று வரும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் தங்கும் விடுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று பிரிட்டனில் இருந்து வந்த காட்பாடியை சேர்ந்த 49 வயது நபர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக பயணித்ததாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.நேற்று மேலும் 8 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த அவர்கள், அங்கு வந்திருந்த தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பெருந்துறையில் உள்ள கல்லூரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

மேலும், 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதும் இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கண்டறியப்பட்ட 17 பேரில், மதுரையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, மேலும், சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அமெரிக்காவில் இருந்து திரும்பி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவரின் குடும்பத்தில் 4 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நால்வரில் 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞர் அடக்கம். இவர்கள் அனைவருமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் 10 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லிக்கு பயணித்தவர்கள். மேலும், ஏற்கனவே வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

66-வதாக பாதிக்கப்பட்ட நபர் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், வெளிநாடு சென்று வந்ததாகவோ, வைரஸ் பாதித்த யாருடன் தொடர்பில் இருந்ததாகவோ சுகாதாரத்துறை தகவல் எதும் வெளியிடவில்லை.

குளித்தலையைச் சேர்ந்த 42 வயது நபர், சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தற்போது கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.